ஆப்கானில் தலிபான்கள் விதித்த புதிய தடை!
ஆப்கானிஸ்தானை கடந்த 7 மாதங்களாக ஆட்சி செய்து வரும் தலீபான்கள் பெண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையிலான கட்டுப்பாடுகளை தொடர்ந்து விதித்து வருகின்றனர்.
அண்மையில் 6-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவிகள் கல்வி கற்க தடை விதித்த தலீபான்கள், திறக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே பள்ளிகளை மூடி மாணவிகளை வீட்டுக்கு திருப்பி அனுப்பினர்.
இதற்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், ஆண்கள் துணையில்லாமல் வந்ததால் பெண்களை விமானங்களில் ஏற விடாமல் தலீபான்கள் திருப்பி அனுப்பி அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.
இந்த நிலையில், தற்போது ஆப்கானிஸ்தானில் ஆண்களும் பெண்களும் ஒரே நாளில் பொழுதுபோக்கு பூங்காவிற்கு செல்வதை தலீபான்கள் தடை செய்துள்ளனர்.
அதன்படி, பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு புதன் முதல் சனி வரையிலான தினங்களில் ஆண்களும் தொடர்ந்து வாரத்தின் பிற்பகுதியில் பெண்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்ற விதிமுறையை தலிபான்கள் கொண்டு வந்துள்ளனர்.
அதேசமயம் தலிபான்களின் இந்த நடவடிக்கை ஆப்கானிஸ்தானில் பிரிவினை விதிகளை மேலும் அமல்படுத்தும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் , தலீபான் உறுப்பினர்கள், ஆயுதங்கள் மற்றும் ராணுவ சின்னங்களுடன் பொழுதுபோக்கு பூங்காவில் சவாரி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, ஆப்கானிஸ்தான் முழுவதும் கடுமையான இஸ்லாமிய சட்டங்களை அமல்படுத்தத் தொடங்கியதாக பல வலதுசாரி குழுக்கள் தெரிவித்துள்ளன.
இப்படி தொடர்ந்து, ஆப்கனிஸ்தானில் ஆண் பெண் பிரிவினைவாதம் வேரூன்றி வருவது குறித்து உலக நாடுகள் மத்தியில் கவலை ஏற்படுத்தியுள்ளது.