அமெரிக்க பொழுதுபோக்குப் பூங்காவில் விபத்து ; ரோலர் கோஸ்டர்களின் பாதுகாப்பில் புதிய மாற்றம்
ஜோர்ஜியாவில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவொன்றில் அண்மையில் இடம்பெற்ற உயிரிழப்பை ஏற்படுத்திய விபத்தொன்றைத் தொடர்ந்து, 'சிக்ஸ் பிளாக்ஸ்' (Six Flags) நிறுவனம் 'கோலியாத்' (Goliath) ரோலர் கோஸ்டர் மற்றும் அதுபோன்ற ஏனைய சவாரி இயந்திரங்களில் மேலதிக பாதுகாப்பு பட்டியைக் (seat belts) பொருத்த தீர்மானித்துள்ளது.
பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஒரு விரிவான நடவடிக்கையாகவே இந்த மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாகப் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 12ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சோகமான விபத்தில் உயிரிழந்தவர், அட்லாண்டாவைச் சேர்ந்த 42 வயதான ஹசன் ஜிஹாத் இப்னு கரீம் (Hasan Jihad Ibn Karim) ஆவார்.

உள்ளூர் சமூகப் பாடசாலையொன்றின் கல்வியாளராகவும் , உறுப்பினராகவும் திகழ்ந்த இவர், ரோலர் கோஸ்டர் இயங்கிக் கொண்டிருந்த போது தனது இருக்கையிலிருந்து தூக்கி வீசப்பட்டு விபத்துக்குள்ளானார்.
அவர் தரையில் விழுவதற்கு முன் ஏனைய பயணிகள் மீதும் மோதியதாகவும், இதில் நான்கு சிறுவர்கள் உட்படப் பலர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.