ஈரான்–அமெரிக்க உறவில் புதிய நகர்வு ; டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே கையெழுத்திடப்படவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை (14) சனிக்கிழமை கையெழுத்தாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது 'Truth Social' சமூக ஊடகக் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி, இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து 'ஹோர்முஸ் நீரிணை' உடனடியாக அனைவருக்கும் திறந்துவிடப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுடன் அமெரிக்கா கொண்டுள்ள உறவானது, முந்தைய அமெரிக்க நிர்வாகங்களை விட முற்றிலும் மாறுபட்ட ஒரு உறவு என்று தெரிவித்துள்ள அவர், எதிர்காலத்தில் ஈரான் மற்றும் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
இருப்பினும், இந்த ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகாது என ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் இஸ்மாயில் பகாயியை மேற்கோள் காட்டி அந்நாட்டு அரசு ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மறுதரப்பின் தயக்கம் காரணமாகவே இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளதால், ஒப்பந்தம் கையெழுத்தாகும் திகதி குறித்த எந்தவொரு கருத்து தொடர்பிலும் அவதானமாகச் செயல்பட வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது.