ஈரானின் புதிய உச்ச ஆன்மீகத் தலைவர் மொஜ்தபா காமெனெய் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் காயமடைந்ததாக பரவி வந்த வதந்திகளுக்கு மத்தியில், ஈரானின் புதிய உச்ச ஆன்மீகத் தலைவர் மொஜ்தபா காமெனெய் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸெஷ்கியானின் மகன் யூசுப் பெஸெஷ்கியான் தெரிவித்துள்ளார்.
ஈரானின் முக்கிய செய்தி நிறுவனமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அகா மொஜ்தபா காயமடைந்ததாக சில தகவல்கள் நான் கேட்டேன். அவருடன் தொடர்பில் இருந்த சிலரை நான் கேட்டபோது, ‘இறைவனின் அருளால் அவர் பாதுகாப்பாக உள்ளார், கவலைப்பட வேண்டியதில்லை’ என அவர்கள் தெரிவித்தனர் என குறிப்பிட்டுள்ளார்.
கொல்லப்பட்ட முன்னாள் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனெியின் மகனான மொஜ்தபா காமெனெய், ஈரானின் புதிய ஆன்மீகத் தலைவராகவும் உச்ச தலைவராகவும் அறிவிக்கப்பட்டார்.
ஆனால் அந்த அறிவிப்புக்கு பிறகு அவர் பொதுமக்கள் முன் தோன்றவில்லை. அவரிடமிருந்தோ அல்லது அவரது அலுவலகத்திலிருந்தோ எழுத்துப் பூர்வமான அறிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இஸ்ரேலிய தரப்பிலிருந்து கிடைத்த தகவலின்படி, கடந்த வாரம் மொஜ்தபா காமெனெயை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
எனினும் அந்த முயற்சியில் அவர் உயிர் தப்பியதாகவும், சிறிய காயம் மட்டுமே ஏற்பட்டிருக்கலாம் என்றும் இஸ்ரேல் நம்புகிறது.
இதற்கிடையில், அவரது பதவியேற்புக்கு பின்னர் ஈரான் அரச ஊடகங்கள் காமெனெயின் பழைய காட்சிகளை வெளியிட்டு அவரை பொதுமக்களுக்கு காட்ட முயன்றன.
மேலும், பிரசார வலையமைப்புகள் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் படங்களையும் பரப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
தலைநகர் தெஹ்ரானில் உள்ள வலி அஸ்ர் சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரிய சுவரோவியத்தில், இளம் காமெனெய் தனது தந்தையிடமிருந்து ஈரான் தேசியக் கொடியைப் பெறும் காட்சி இடம்பெற்றுள்ளது.