ட்ரம்பால் வந்த புது தலைவலி ; H-1B, H-4 விசா விண்ணப்பதாரர்களுக்கு சிக்கல்
அமெரிக்காவில் வெளிநாட்டிலிருந்து சென்று வேலை செய்ய H-1B மற்றும் H-4 விசா பெற ட்ரம்ப் நிர்வாகம் மேலும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்களின் சமூக வலைதள வலைதள கணக்குகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். இது அனைத்து நாடுகளைச் சேர்ந்த H-1B மற்றும் H-4 விண்ணப்பதாரர்களுக்கும் பொருந்தும்.

புதிய கட்டுப்பாடு
விசா முறைகேடுகளை தடுக்கவும் தகுதியானவர்களை தேர்வு செய்யவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோஷியல் மீடியா வெட்டிங் விண்ணப்பதாரர் கடந்த 5 ஆண்டுகளில் பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்ட பொதுவான தகவல்கள் மற்றும் தரவுகளை அமெரிக்கக் குடிவரவு அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள்.
விண்ணப்பத்தில் அளிக்கப்பட்டுள்ள தகவல்கள் உண்மையானதா என்பதையும், பாதுகாப்பிற்கு ஏதேனும் அச்சுறுத்தல் உள்ளதா என்பதையும் இதன் மூலம் உறுதி செய்வார்கள்.
இந்த செயல்முறையால் விசா நடைமுறைகளுக்கு வழக்கத்தை விடக் கூடுதல் காலம் ஆகலாம் என்பதால், விண்ணப்பதாரர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் பணியாற்றிவிட்டு தற்போது இந்தியாவிற்குத் திரும்பியுள்ள ஊழியர்கள், விசா கிடைக்காததால் மீண்டும் தங்களது வேலைக்குத் திரும்ப முடியாமல் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த புதிய கட்டுப்பாடு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.