பிரம்மாண்ட பூசணிக்காயை வளர்த்து புதிய உலக சாதனை ; கின்னஸ் சாதனை படைத்த பிரித்தானிய விவசாயி
பிரித்தானியாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் சுமார் 1,295 கிலோகிராம் எடைக் கொண்ட பிரம்மாண்ட பூசணிக்காயை வளர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
பிரித்தானியாவின் ஹாம்ப்ஷயர் மாகாணம் லிமிங்டனைச் சேர்ந்த இயன் பேட்டன் (Ian Paton), தான் வளர்த்த இந்தப் பிரம்மாண்ட பூசணிக்காயை பெர்க்ஷயரில் உள்ள ரீடிங் நகருக்கு அருகில் நடைபெற்ற காய்கறி எடைபோடும் போட்டியில் சமர்ப்பித்திருந்தார்.

'பாகீரா' (Bagheera) எனப் பெயரிடப்பட்ட இந்தப் பூசணிக்காய் 2,856.8 பவுண்டுகள் (1,295.8 கிலோகிராம்) எடையும், 20 அடிகளுக்கு மேல் (6 மீற்றர்) சுற்றளவும் கொண்டுள்ளது.
இதனை கின்னஸ் உலக சாதனை நடுவரான செபாஸ்டியன் சுஸ்கியால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
தன் இரட்டைச் சகோதரரான ஸ்டூவர்ட்டுடன் இணைந்து கடந்த 50 ஆண்டுகளாகப் பிரம்மாண்ட பூசணிக்காய்களை வளர்த்து வந்துள்ள 65 வயதான இயன் பேட்டன், தனியாகப் போட்டியில் கலந்துகொண்டது இதுவே முதல்முறையாகும்.
இந்தப் பூசணிக்காயைப் பராமரிக்க நாளொன்றுக்கு ஆறு மணி நேரம் வரை செலவழித்ததாகவும், தினசரி சுமார் 130 கேலன் தண்ணீர் வழங்கியதாகவும் குறிப்பிட்ட அவர், இது ஒரு கடுமையான உழைப்பு என்று தெரிவித்தார்.
இந்தப் பூசணிக்காய் தற்போது சவுதாம்ப்டனுக்கு அருகில் உள்ள சன்னிஃபீல்ட்ஸ் பண்ணையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அடுத்த சில வாரங்களுக்கு அங்கு பொதுமக்களின் பார்வைக்கு வைக்க ப்படும் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.