கரீபியக் கடற்கரையை தாக்கிய ‘மெலிசா’ புயல்: கனடியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை
கரீபியக் கடற்கரையை தாக்கிய சக்திவாய்ந்த ‘மெலிசா’ சூறாவளியால் இதுவரை எந்தக் கனடியரும் உயிரிழக்கவில்லை என்று கனடாவின் வெளிநாட்டு உதவிகளை கண்காணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ரன்தீப் சராய் தெரிவித்துள்ளார்.
இது மிகப் பெரிய பேரிடர் எனவும் ஆபத்து நிலையில் மிகவும்மோசமான புயல் இது எனவும் தெரிவித்துள்ளார்.
ஜமைக்கா இதுவரை சந்தித்த மிக வலிமையான புயல் இதுதான். அத்தகைய அழுத்தத்துக்கு எந்தக் கட்டுமானமும் எதிர்க்க முடியாது,” என தெரிவித்துள்ளார்.

கனடா தற்போது சூழ்நிலையை “மிக நெருக்கமாகக் கண்காணித்து வருவதாகவும்,” தேவையான போதெல்லாம் மனிதாபிமான உதவிகள் அல்லது தளவாட ஆதரவுகள் வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஜமைக்கா மற்றும் கியூபா ஆகியவை ஐக்கிய நாடுகள் அவசர நிதியிலிருந்து தலா 4 மில்லியன் அமெரிக்க டாலர்களை பெற்றுள்ளதாகவும், அந்த நிதிக்கு இந்த ஆண்டு கனடா 29 மில்லியன் டாலருக்கு மேல் பங்களித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், கனடா ஆதரிக்கும் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் உலக உணவு திட்டம் வழியாகவும் உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இரு அரசுகளுடனும் இணைந்து நாம் இன்னும் என்ன செய்யலாம் என்பதை ஆய்வு செய்கிறோம். எந்தக் கோரிக்கையும் வந்தால் கனடா அதனை நேர்மறையாக பரிசீலிக்கும் என சராய் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், கனடாவின் வெளிவிவகாரத்துறை (Global Affairs Canada) அவசர உதவி குழுவை கரீபியன் பகுதிக்கு அனுப்பி, அங்குள்ள கனடியர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது.