ஆப்கான் விவகாரத்தில் தலையிட யாருக்கும் உரிமையில்லை; தலிபான்கள் திட்டவட்டம்
ஆப்கான் விவகாரத்தில் தலையிட பாகிஸ்தான் உள்ளிட்ட எந்த நாட்டுக்கும் அனுமதியில்லை என தலிபான்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேற ஆரம்பித்தவுடனேயே தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டனர். அதன் பின்னர் படிப்படியாக ஒவ்வொரு மாகாணமாகக் கைப்பற்றிய தலிபான்கள் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் திகதியன்று தலைநகர் காபூலை கைப்பற்றியிருந்தனர்.
இதனையடுத்து அமெரிக்க மற்றும் மேற்கத்தியப் படைகள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்றும் தலிபான்கள் நிபந்தனை விதித்தனர். தொடர்ந்து ஆகஸ்ட் 31 ஆம் அமெரிக்காவின் கடைசி படையும் அங்கிருந்து வெளியேறியது.
இந்நிலையில் அங்கு முறைப்படி ஆட்சி அமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் கடந்த வாரம் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ் அமைப்பின் தலைவர் லெஃப்டினன்ட் ஜெனரல் ஃபயிஷ் ஹமீது காபூல் சென்று தலிபான்களை சந்தித்துப் பேசிய நிலையில் அந்த சந்திப்பு தொடர்பாக பல்வேறு தகவல்களும் வெளியாகி வந்தன.
இதனால், தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாகீத் இந்த சந்திப்பு குறித்துப் பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில்,
முல்லா பரதாரை கடந்த வாரம் பாகிஸ்தானின் ஐ.எஸ். தலைவர் சந்தித்தது உண்மையே. இந்த சந்திப்பின் போது இருநாட்டு நல்லுறவைப் பேணுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு எதிராக பயங்கரவாதிகள் செயல்பட ஆப்கன் மண் அனுமதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
மற்றபடி ஆப்கன் விவகாரத்தில் தலையிட பாகிஸ்தான் உள்ளிட்ட எந்த நாட்டுக்கும் அனுமதியில்லை. அதேபோல், சில ஊடகங்களில் வெளியான தகவலைப் போல் பாகிஸ்தான் குழுவை நாங்கள் அழைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
அத்துடன் அவர்கள் தான் எங்களை சந்திக்க விரும்பியதனால் தாங்கள் அதற்கு அனுமதி வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.