கனடாவில் கடற்கரைக்கு செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை
கனடாவின் வான்கூவாரில் இந்த வார இறுதியில் கடலில் நீராடத் திட்டமிட்டுள்ளவர்கள், முதலில் சம்பந்தப்பட்ட கடற்கரை பாதுகாப்பு அறிவிப்புகளை கட்டாயம் சரிபார்க்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வான்கூவர் கடலோர சுகாதாரத் துறையின் அண்மைய நீர் பரிசோதனைகளின்படி, பல கடற்கரைகளில் ஈ.கோலை (E.coli) பாக்டீரியாவின் அளவு அதிகரித்துள்ளதால் அங்கு நீராடுவது பாதுகாப்பானதல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி கிட்ஸ் பொயின்ட், தேர்ட் பீச், இங்கிலிஷ் பே, ட்ரவுட் லேக் மற்றும் சன்செட் பீச் ஆகிய இடங்களில் "நீராட வேண்டாம்" என்ற எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

நீர் மாதிரிகளில் 100 மில்லிலிட்டருக்கு 200-ஐ விட அதிகமான சராசரி E.coli அளவு அல்லது ஒரே மாதிரியில் 400-ஐ விட அதிகமான அளவு பதிவானதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் லயன் பே மற்றும் லொகார்னோ பீச் ஆகிய கடற்கரைகளில் பெறப்பட்ட நீர் மாதிரிகளில் எதிர்பார்த்ததை விட அதிக E.coli அளவு கண்டறியப்பட்டுள்ளதால் அவை தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.