பிரித்தானியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள முக்கொலை; பொலிஸார் தீவிர விசாரணை!
பிரித்தானியாவின் - நார்தம்ப்டன்ஷையரில் முக்கொலை விசாரணையில், பாதிக்கப்பட்டவர்களில் தேசிய சுகாதார சேவையின் செவிலியர் ஒருவர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவரின் இரண்டு குழந்தைகளும் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 35 வயதான அஞ்சு அசோக், 6 வயதான ஜீவா சாஜு, மற்றும் 4 வயதான ஜான்வி சாஜு, 4, ஆகியோர் வியாழக்கிழமை காலை கெட்டரிங்கில் உள்ள Petherton Court இல் கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இதில் நகரின் பொது மருத்துவமனையில் பணிபுரிந்த அஞ்சு அசோக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், இரண்டு குழந்தைகளும் மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
கொலைச் சந்தேகத்தின் பேரில் 52 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டு புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், பெண் மற்றும் குழந்தைகளின் முறையான அடையாளம் காணப்பட உள்ளது என்று பொலிசார் தெரிவித்தனர். அடுத்த இரண்டு நாட்களில் தடயவியல் பிரேத பரிசோதனைகள் நடக்கும் என்றும், அக்கம் பக்க காவல் குழு அப்பகுதியில் ரோந்து வருவதாகவும் மூத்த விசாரணை அதிகாரி, Det Insp சைமன் பார்ன்ஸ் கூறினார்.
இந்த விசாரணையை முன்னேற்றுவதற்கும், இந்த துயர மரணங்களுக்கு வழிவகுத்த நிகழ்வுகளின் காலவரிசையை நிறுவுவதற்கும் நாங்கள் தொடர்ந்து வேலை செய்கிறோம், என்று பார்ன்ஸ் கூறினார்.
இந்த மரணம் தொடர்பாக விசாரணையாளர்கள் வேறு யாரையும் அடையாளம் காணவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.