டொராண்டோவில் 'வீட்டிலிருந்து வேலை செய்ய' அனுமதி!
கனடாவின் ஒன்டாரியோவில், ஃபிஃபா உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் நாட்களில், அரசு ஊழியர்கள் தற்காலிகமாக வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான கோரிக்கைகளை அங்கீகரிக்க மேலாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் டக் ஃபோர்டு தலைமையிலான மாகாண அரசு இந்த தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
எனினும், இந்த சலுகை டொராண்டோவில் பகல் நேரத்தில் போட்டிகள் நடைபெறும் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே பொருந்தும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஒன்டாரியோ பொதுச் சேவை ஊழியர்கள் வாரம் ஐந்து நாட்களும் அலுவலகத்திற்கு வந்து தங்களின் கடமைகளை ஆற்ற வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு. ஆனால், ஜூன் 12 மற்றும் ஜூன் 26 ஆகிய திகதிகளில் டொராண்டோவில் பகல் நேர உலகக் கோப்பை போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
இத்தகைய அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, குறுகிய கால நெகிழ்வுத்தன்மையை வழங்க மேலாளர்கள் தற்காலிக ரிமோட் வேலை கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கலாம்," என அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
டொராண்டோ நகரம் இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 6 போட்டிகளை நடத்தவுள்ளது. பெரும்பாலான போட்டிகள் மாலை நேரங்களிலும் வார இறுதிகளிலும் நடந்தாலும், இக்காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான சர்வதேச பார்வையாளர்கள் டொராண்டோவிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக ஜூன் 8 முதல் ஜூலை 3 வரை டொராண்டோவில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் தற்காலிகமாக வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதியை வழங்குமாறு பல்வேறு அரசு ஊழியர் தொழிற்சங்கங்கள் கடந்த ஏப்ரல் மாதமே கோரிக்கை விடுத்திருந்தன.
"சாதாரணமாகவே டொராண்டோவில் தினசரி பயணம் செய்வது ஊழியர்களுக்குப் பெரும் சவாலாக உள்ளது. உலகக் கோப்பை கூட்ட நெரிசல், கட்டுமானப் பணிகள் மற்றும் போக்குவரத்து மையங்களில் ஏற்படும் மாற்றங்கள் ஊழியர்களுக்குக் கடுமையான மன அழுத்தத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும்," என்று தொழிற்சங்கங்கள் தங்களது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தன.
உலகக் கோப்பை போட்டிகளின் போது நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் வேலை நேரத்திலும், வேலை செய்யும் இடத்திலும் தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என்று டொராண்டோ மாநகராட்சியும் கேட்டுக்கொண்டுள்ளது.