சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஓல் ஐஸ் ஒன் ரஃபா
காசா நகர் மீது இஸ்ரேல் மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கையை குறிக்கும் வகையில், “ஓல் ஐஸ் ஒன் ரஃபா” (All eyes on Rafah) என்ற ஹேஷ்டேக், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
தெற்கு காசாவில், ரஃபா நகரத்திலுள்ள தற்காலிக முகாம்கள் மீது, இஸ்ரேல் படைகள் கடந்த 26 ஆம் திகதி குண்டு வீசி தாக்குதல் நடத்தியிருந்தது.
இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 45 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதுடன், 249 பேர் காயமடைந்ததாக காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
இதனிடையே, நேற்றைய தினமும் ரஃபா தற்காலிக முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 37 க்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையிலேயே, காசா நகரில் நடைபெற்று வரும் படுகொலையைக் குறிக்கும் வகையில், All eyes on Rafah என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
குறித்த ஹேஷ்டேக் உடன் பாலஸ்தீன மக்கள் குறித்து, இந்தியாவிலுள்ள ஈரான் தூதரகம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
இதேவேளை, பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக மெக்சிகோவிலுள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழ்நிலையும் உருவானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பலஸ்தீனத்தை தனி அரசாக அங்கீகரிப்பதில் தனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என பிரான்ஸும் (french) ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் அறிவித்துள்ளார்.
இதனிடையே, ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகளும் கூட்டாக பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன.
குறித்த நாடுகள் பலஸ்தீனத்தை முறையாக அங்கீகரித்ததால், ரஃபா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை அவசரக் கூட்டத்தை கூட்டியது.
இது தொடர்பாக ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் தெரிவிக்கையில், இந்த கொடூர மோதலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தஞ்சம் புகுந்த அப்பாவி மக்களின் உயிரை பறிக்கும் இஸ்ரேலின் தாக்குதல் நடவடிக்கையை தான் கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், காசாவில் பாதுகாப்பான இடம் என எதுவும் இல்லை என தெரிவித்த அவர், இந்தக் கொடூரம் நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.