இது சரியான தருணம் அல்ல... கனேடிய மக்களுக்கு அரசாங்கம் விடுத்த முக்கிய கோரிக்கை
கனடா மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை பெடரல் நிர்வாகம் மீண்டும் முன்வைத்துள்ளது.
புதிய கொரோனா மாறுபாடான ஓமிக்ரான் பரவலை கருத்தில் கொண்டு கனேடிய சுகாதாரத்துறை அமைச்சர் குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
புதன்கிழமை கூட்டு பத்திரிகையாளர்கள் சந்திப்பை முன்னெடுத்த சுகாதாரத்துறை அமைச்சர் Jean-Yves Duclos, இந்த விவகாரம் தொடர்பில் முக்கிய கோரிக்கையை முன்வைத்தார்.
தற்போதைய சூழலில் பயணங்களுக்கு திட்டமிடும் கனேடியர்கள், இது சரியான தருணம் அல்ல என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்திவரும் ஓமிக்ரான் மாறுபாடானது பயணங்களை மேற்கொள்ளும் கனேடிய மக்களுக்கும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அடுத்த நான்கு வாரங்களுக்கு பயணங்களை தவிர்க்கலாம் என குறிப்பிட்டுள்ள அவர், நிலைமையை ஆராய்ந்த பிறகு அரசு உரிய தகவலை வெளியிடும் என்றார்.
இதுபோன்ற நடவடிக்கை தற்போதைய நிலையில் பொதுமக்களுக்கு கடுமையாக இருக்கலாம், ஆனால் மருத்துவமனைகளில் அதிகமானோர் அனுமதிக்கப்படுவதை தவிர்க்கவும், முன்களப்பணியாளர்களுக்கு அதிக வேலைப்பழுவை அளிக்காமல் இருக்கவும் கட்டுப்பாடுகள் தேவைப்படுகிறது என்றார்.
முன்னதாக கனடாவில் ஓமிக்ரான் சமூக பரவல் காணப்படுவதாக முதன்மை சுகாதார அதிகாரி Dr. Theresa Tam திங்கட்கிழமை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.