லண்டன் நகரில் அதிகாலை நடந்த பயங்கர தீ விபத்து: ஒருவா் உயிரிழப்பு
கனடாவின் லண்டன் நகரில் புதன்கிழமை அதிகாலை நடந்த ஒரு வீட்டுத் தீ விபத்தில் நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
புதன்கிழமை காலை 6:30 மணிக்குப் பிறகு, ஆக்ஸ்போர்டு தெரு கிழக்குக்கு வடக்கே உள்ள லைமேன் தெருவில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அவசரகாலப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த லண்டன் தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வீட்டிலிருந்து ஒருவரும் ஒரு நாயும் பாதுகாப்பாக வெளியேறினர். தீயணைப்பு வீரர்களிடம் பேசிய அந்த நபர், வீட்டிற்குள் இன்னும் ஒருவரிருக்கக்கூடும் என்று தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வீட்டிற்குள் நுழைந்து தேடியபோது, வீட்டின் பிரதான தளத்தில் உடல் கருகிய நிலையில் ஒரு நபர் இறந்து கிடப்பதைக் கண்டறிந்து உறுதிப்படுத்தினர்.
துணைத் தலைவர் கேரி பிரிட்ஜ் அவர்களின் கூற்றுப்படி, தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்தடைந்தபோது வீட்டின் உள்ளிருந்து புகை மற்றும் தீப்பிழம்புகள் வெளியேறிக்கொண்டிருந்தன.
இந்த விபத்தால் அந்த வீடு கடுமையான சேதமடைந்துள்ளது. தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், உயிரிழந்தவரின் அடையாளம் குறித்த விவரங்களை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து லண்டன் காவல்துறை முக்கிய குற்றப்பிரிவு மற்றும் ஒன்டாரியோ தீயணைப்பு மார்ஷல் அலுவலகம் இணைந்து விசாரணையைத் டேமேற் கொண்டுள்ளன. இந்தத் தீ விபத்து சந்தேகத்திற்கு இடமானதா என்பது குறித்துக் கேட்டதற்கு அதிகாரிகள் உடனடியாக எந்தவிதக் கருத்துகளையும் தெரிவிக்கவில்லை.