அமெரிக்காவின் புதிய விதிகளால் கனேடிய பயணிகள் அவஸ்தை
பயண நேரத்திற்கும் ஒரு நாள் முன்னர் கொரோனா சோதனை முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற அமெரிக்காவின் கடும்போக்கால் கனேடிய பயணிகள் பெரும்பாலானோர் தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க நிர்வாகத்தின் புதிய விதியினால் கனேடியர்கள் மற்றும் அமெரிக்காவிற்கு விமானம் மூலம் பயணம் செய்யும் அனைத்து வெளிநாட்டவர்களும், அவர்கள் புறப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாகவே கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், ரொறன்ரோவில் குடும்பத்தை சந்தித்துவிட்டு அமெரிக்கா திரும்பிய ஸ்டீவ் என்பவர், தங்களது அரசாங்கத்தின் குறித்த விதிகளில் உடன்பாடில்லை என கொந்தளித்துள்ளார்.
மட்டுமின்றி, கனடாவுக்கு செல்வதே பெரும்பாடாக இருந்தது எனவும், தற்போது இங்கிருந்து சொந்த நாட்டுக்கு செல்வது அதைவிட கடினமாக உள்ளது என்கிறார் அவர்.
ரொறன்ரோவை சேர்ந்த ஒரு தம்பதி புளோரிடா செல்வதற்காக உள்ளூர் மருந்தகத்தில் 40 டொலர்கள் செலவிட்டு உரிய சோதனைகள் மற்றும் முடிவுகளை பெற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
போதுமான கால அவகாசம் தங்களுக்கு இருந்தது எனக் கூறும் அந்த தம்பதி, மக்கள் கொஞ்சம் பதற்றப்படாமல் ஒன்றின் பின் ஒன்றாக நடைமுறைப்படுத்தினால் விமான பயணத்திற்கு முன்பு சிக்கல் ஏற்படாது என்கிறார்.
ரொறன்ரோ விமான நிலையத்தில் அனைவருக்கும் சோதனை முன்னெடுக்கப்படவில்லை எனவும், வரைமுறைப்படுத்த சிறிது கால அவகாசம் எடுத்துக்கொள்ளலாம் எனவும் சிலர் குறிப்பிடுகின்றனர்.
மேலும், விமான நிலையத்தில் அனைவரையும் சோதனைக்கு உட்படுத்துவது என்பது சாத்தியப்படாத ஒன்று எனக் குறிப்பிட்டுள்ள அதிகாரி ஒருவர், பயணிகள் தங்கள் குடியிருப்புகளிலேயே சோதனை முடித்துக்கொள்ளலாம் என்கிறார்.