தூதரை நியமித்த பாகிஸ்தான்; அடம் பிடிக்கும் அமெரிக்கா!
வாஷிங்டனுக்கான பாகிஸ்தான் தூதராக நியமிக்கப்பட்டுள்ள மசூத் கானை ஏற்றுக்கொள்வதற்கு , அமெரிக்க வெளியுறவுத்துறை வழக்கத்திற்கு மாறாக நீண்ட நேரம் எடுத்து வருவதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் அமெரிக்காவின் தாமதம் செயல்பாட்டில் ஒரு இக்கட்டான சூழலை ஏற்படுத்தி வருகிறது என டான் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் வரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் (PoK) அதிபராக பணியாற்றிய மசூத் கான், நவம்பரில் அமெரிக்காவுக்கான தூதராக நியமிக்கப்பட்டார்.
மசூத் கான், இதற்கு முன்னர் ஜெனீவா மற்றும் நியூயார்க்கில், ஐ.நாவுக்கான பாகிஸ்தானின் நிரந்தர பிரதிநிதியாகவும், சீனாவுக்கான தூதராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில் வாஷிங்டனில் (Washington) இருந்து வெளியேறும் பாகிஸ்தான் தூதர் ஆசாத் மஜீத் கானுக்கு பதிலாக மசூத் கான், நியமிக்கப்பட்டார்.
மசூத் கானுக்கான ஒப்பந்தத்திற்கான கோரிக்கை நவம்பர் இரண்டாவது வாரத்தில் வெளியுறவுத்துறைக்கு அனுப்பப்பட்டதாக பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஒப்பந்தம் என்பது அதிகாரி பணியாற்றப்போகும் நாடு வரவிருக்கும் தூதாண்மை அதிகாரிக்கு அளிக்கும் ஒப்புதலாகும்.
இந்நிலையில் வழக்கமாக, கடந்த காலங்களில் பாகிஸ்தான் தூதர்களுக்கான ஒப்பந்தங்களை வெளியிட வெளியுறவுத்துறை நான்கு முதல் ஆறு வாரங்கள் எடுத்துக்கொள்வது வழக்கம் என முன்னாள் வெளியுறவு செயலாளர் கூறியுள்ளார்.