2023 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் பங்களாதேஷை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி!
2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று இடம்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியுள்ளது.
இந்த போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஒரு சர்வதேச கிரிக்கெட் மைதானமான ஈடன் கார்டன்ஸில் நேற்று மதியம் 2.00 ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 45.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களை இழந்து 204 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணியின் சார்பில் அதிகபட்சமாக மஹ்முதுல்லாஹ் 56 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
பாகிஸ்தான் அணி சார்பில் பந்து வீச்சில் ஷஹீன் ஷா அப்ரிடி, முகமது வாசிம் தலா 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இதன்படி, 205 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 32.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியை ஈட்டியது.
துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பில் அதிகப்பட்சமாக ஃபகார் ஜமான் 81 ஓட்டங்களையும், அப்துல்லா ஷபீக் 68 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பங்களாதேஷ் அணி சார்பில் பந்து வீச்சில் மெஹிதி ஹசன் மிராஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்த போட்டியில் தோல்வியடைந்ததை தொடர்ந்து பங்களாதேஷ் அணி உலகக் கிண்ண தொடரில் இருந்து வௌியேறுகிறது.
பங்களாதேஷ் அணி இதுவரை விளையாடி 7 போட்டிகளில் 6 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அணி 7 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்றுள்ளது. 4 தோல்விகளை சந்தித்துள்ளது.