சொந்தமாக நாணயம் இல்லாத நாடு எது தெரியுமா?
தென் கிழக்கு ஐரோப்பியாவில் அமைந்துள்ள சிறிய நாடான மொண்டினீக்ரோ, உலகின் ஆச்சரியங்களை உருவாக்கும் சில தனித்துவமான அரசியல் மற்றும் பொருளாதார நிலைப்பாடுகளுக்கு சொந்தமானது.
அந்தவகையில், இது சொந்த நாணயமே இல்லாத நாடாக விளங்குகிறது.
மொத்தம் சுமார் 6.17 லட்சம் மக்கள் வாழும் இந்த குட்டி நாடு, 2002 ஆம் ஆண்டிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரப்பூர்வ நாணயமான யூரோவை தன்னிச்சையாகப் பயன்படுத்தி வருகிறது.
ஆனால், இந்த நாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராகவும் இல்லை, யூரோவை பயன்படுத்தும் எந்த விதமான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டதும் இல்லை.
மண்டினீக்ரோ, இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு யூகோஸ்லாவிய சோசலிச கூட்டாட்சி உறுப்பினராக இருந்தது. அந்தகாலத்தில் யூகோஸ்லாவிய தினார் நாணயமாக இருந்தது.
ஆனால், 1990களில் ஏற்பட்ட கடும் பணவீக்கமும் நிதிமுறைகேடுகளும் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்தது.
1993இல் பணவீக்க விகிதம் மாதத்திற்கு 100% என்ற அளவுக்கே சென்றது. இதையடுத்து, 1999இல் ஜெர்மனியின் டாய்ச்ச்மார்க் நாணயத்தை நம்பிக்கையாகப் பயன்படுத்தத் தொடங்கியது.
இந்த நாணய முறை மாற்றம் மொண்டினீக்ரோவின் பொருளாதாரத்தில் நிலைத்த முன்னேற்றத்தை கொண்டு வந்தது. இப்போது, அடுத்த கட்டமாக ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆனால், சில நிபந்தனைகள் மற்றும் பிராந்திய அரசியல் சிக்கல்கள் காரணமாக அது இன்றும் காத்திருப்பிலேயே உள்ளது.