இம்ரான்கான் கட்சியின் 50 மந்திரிகள் காணவில்லை!
பாகிஸ்தானில் நாளைய தினம் திங்கட்கிழமை (28-03-2022) மீண்டும் நாடாளுமன்றம் நாளை கூடும் நிலையில், எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிச்சயம் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையை போல பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்துக்கு பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசே காரணம் எனக்கூறி அவரது அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன.
நேற்று முன்தினம் (25-03-2022) நாடாளுமன்றம் கூடிய சில நிமிடங்களிலேயே சபாநாயகர் அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்ததால் நம்பிக்கையில்லா தீர்மனத்தை கொண்டு வரும் எதிர்க்கட்சிகளின் முயற்சி தற்காலிமாக தோல்வியில் முடிந்தது.
இதேவேளை, ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் நாளை (28-03-2022) மீண்டும் கூடும் நிலையில், எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மனத்தை நிச்சயம் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இம்ரான்கானின் சொந்த கட்சி உறுப்பினர்கள் சிலரே நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவளிக்கக்கூடும் என்பதால் ஆட்சி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இம்ரான்கான் கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மந்திரிகள் கடந்த சில நாட்களாக பொதுவெளியில் தோன்றாமல் மாயமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாயமானவர்களில் 25 பேர் மத்திய மந்திரிகள் என்றும் மற்ற அனைவரும் மாகாண மந்திரிகள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.