இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகியுள்ள பாகிஸ்தான்
இந்தியாவுடன் கண்ணியமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளதாகப் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் இஷாக் தார் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா வான்வழித் தாக்குதல் நடத்தியது.
ஒப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா எடுத்த இந்த நடவடிக்கையை அடுத்து பாகிஸ்தானும் இந்தியாவின் எல்லையோர கிராமங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
இதனையடுத்து, மூன்று நாட்களுக்கும் மேலாக இரண்டு நாடுகளுக்குமிடையில் நீடித்த மோதல், பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதையடுத்து நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டது.
போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து உறவுகளையும் துண்டித்துள்ளது.
குறிப்பாக, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும் ரத்து செய்வதாக அறிவித்தது.
இதனால், வறட்சிக்குள் தள்ளப்பட்டுள்ள பாகிஸ்தான், இந்தியாவிடம் பேச்சுவார்த்தைக்கு வரத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் இஷாக் தார் அறிவித்துள்ளார்.
காஷ்மீர் விவகாரம் உட்பட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் இந்தியாவுடன் கண்ணியமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தப் பாகிஸ்தான் தயாராக உள்ளதாகவும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.