பாகிஸ்தானில் மாடலிங்கை கைவிட மறுத்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி!
பாகிஸ்தானில் மாடலிங்கை கைவிட மறுத்த இளம் பெண் சகோதரரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் பெண்கள் குடும்ப உறுப்பினர்களால் ஆணவக்கொலை செய்யப்படும் சம்வங்கள் தொடர்கதையாகி வருகின்றன.
பாகிஸ்தானின் பஞ்சப் மாகாணம் ஒகாரா மாவட்டத்தை சேர்ந்த சித்ரா காலித் என்கிற 21 வயது பெண் நடனக்கலைஞராகவும், மாடல் அழகியாகவும் இருந்து வந்தார்.
எனினும் சித்ரா காலித் இந்த துறையில் இருப்பதை அவரது குடும்பத்தினர் விரும்பவில்லை. இது குடும்ப பாரம்பரியத்துக்கு எதிரானது என்றும், எனவே நடனம் மற்றும் மாடலிங் துறையில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் சித்ராவை அவரது குடுபம்பத்தினர் தொடர்ந்து வற்புறுத்தி வந்தபோதும்,சித்ரா காலித் அதை ஏற்கவில்லை.
இந்த நிலையில் சித்ரா காலித்தின் உறவுக்காரர் ஒருவர் சித்ரா காலித் பொது இடத்தில் நடனமாடும் வீடியோ ஒன்றை அவரின் சகோதரர் ஹம்சாவுக்கு செல்போனில் அனுப்பினார்.
அதை பார்த்து ஆத்திரத்துடன் வீட்டுக்கு சென்ற ஹம்சா நடனம் மற்றும் மாடலிங் துறையை உடனடியாக கைவிட வேண்டும் என கூறி சித்ராவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி சித்ராவை சரமாரியாக தாக்கி சித்ராவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.
இது தொடர்பான புகாரின் பேரில் ஹம்சாவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அதேவேளை கடந்த 2016ம் ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்த நடிகையும், மாடல் அழகியுமான கந்தீல் பலூச்சை அவரது சகோதரர் கழுத்தை நெரித்து கொலை செய்தது பாகிஸ்தான் மட்டும் இன்றி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
