கனேடிய அதிகாரிகள் முன்பு கத்தியால் தாக்கிக்கொண்ட அகதியால் பரபரப்பு
கனடாவில் பாதுகாப்பாக தங்கும் இடம் அனுமதிக்க வலியுறுத்தி பாலஸ்தீன அகதி ஒருவர் கத்தியால் தன்னைத்தானே குத்திக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அகதிகள் பலர் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை வளமானதாக மாற்ற விரும்பி கனடாவில் புலம்பெயர்கின்றனர். ஆனால் பெரும்பாலான அகதிகளின் நிலை பரிதாபப்படும் வகையில் இருப்பதாகவே கூறப்படுகிறது.
கடந்த வாரம் பாலஸ்தீன அகதி ஒருவர் அதிகாரிகள் முன்னிலையில் தமது வயிற்றில் தன்னைத்தானே குத்திக்கொண்டார். கடந்த 7 மாதங்களாக அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க தாம் போராடி வருவதாகவும், தமக்கு பாதுகாப்பான ஒரு இடம் ஒதுக்க முடியவில்லை என்றால் கனடாவுக்கு வர ஏன் அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாலஸ்தீனியரான Aziza Abusirdana கடந்த 7 மாதங்களாக ரொறன்ரோவின் மேற்கே அகதிகள் விடுதி ஒன்றில் வசிக்கிறார். நம்பி வந்த தம்மை கனடா நிர்வாகம் கைவிட்டுள்ளது என்றே அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தாம் மீண்டும் சொந்த நாட்டுக்கு திரும்பினால் தந்தையும் தாத்தாவும் கட்டாயம் கொன்று விடுவார் என கூறும் Aziza Abusirdana, தமக்கு என்ன நேர்ந்தது என்பதை வெளிப்படையாக கூற மறுத்துள்ளார்.
பாதுகாப்பான ஒரு தங்கும் இடம் வேண்டும் என மட்டுமே தாம் கோருவதாக கூறும் 22 வயது Aziza Abusirdana, மாதம் 1,100 டொலர் உதவித் தொகை அரசாங்கம் வழங்குவதால் உணவுக்கு போதுமான பணம் கைவசம் இருக்கிறது, ஆனால் பாதுகாப்பான தங்கும் இடம் மட்டுமே தமது கோரிக்கை என மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடித்து திரும்பியவர் மீண்டும் தெரிவித்துள்ளார்.