பன்னூன் கொலை முயற்சி வழக்கு ; நிகில் குப்தாவுக்கு 19 ஆண்டுகள் சிறை
காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனைக் கொலை செய்ய முயன்ற வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட இந்தியரான நிகில் குப்தாவுக்கு (55), அமெரிக்க நீதிமன்றம் 19.7 ஆண்டுகள் (235 மாதங்கள்) சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு பயங்கரவாதச் சம்பவங்கள் தொடர்பில் இந்திய விசாரணை அமைப்புகளால் தேடப்படும் நபராகக் குறிப்பிடப்படும் பன்னூன், தடை செய்யப்பட்ட ‘சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்’ (Sikhs for Justice) அமைப்பின் நிறுவனராவார்.

கடந்த 2023ஆம் ஆண்டு அமெரிக்காவில் வைத்து பன்னூனைக் கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படும் சதித்திட்டம் தொடர்பில் நிகில் குப்தா கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நியூயோர்க்கின் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை சுமார் 80 நிமிடங்கள் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையைத் தொடர்ந்து, நிகில் குப்தாவுக்கு 19.7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி விக்டர் மாரெரோ உத்தரவிட்டார்.
இதற்கு முன்னதாக, நீதிமன்றத்தில் பன்னூனைக் கொலை செய்வதற்கான சதித்திட்டம் மற்றும் பணமுறைகேடு உள்ளிட்ட தன் மீதான குற்றச்சாட்டுகளை நிகில் குப்தா ஒப்புக்கொண்டதுடன், தனது செயலுக்கு வருத்தமும் தெரிவித்துள்ளார்.
இதன்போது, கொலை முயற்சியால் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக கடந்த 1,200 நாட்களாகத் தன்னால் வழக்கம்போல் சட்டப் பணிகளை முன்னெடுக்க முடியவில்லை என பன்னூன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பன்னூனைக் கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படும் சதித்திட்டம் தொடர்பில் அவர் தாக்கல் செய்த மற்றொரு மனுவில், இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முன்னாள் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின் (RAW) தலைவர் சமந்த் கோயல் ஆகியோருக்கு தில்லி நீதிமன்றங்கள் ஊடாக சம்மன் அனுப்ப நியூயோர்க் தெற்கு மாவட்ட நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.