தீவிரவாத சந்தேக நபர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டமை குறித்து விசாரணை
கனடாவில் தீவிரவாத சந்தேக நபர்களுக்கு எவ்வாறு கனடிய குடியுரிமை வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரணை செய்வதற்கு நாடாளுமன்ற குழு ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ரெறான்ரோவில் தீவிரவாத தாக்குதல் நடத்த ஆயத்தமாகி இருந்த இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
அகமத் முஸ்தபா எல்டிடி என்ற 62 வயதான நபரும் முஸ்தபா எல்டிடி என்ற அவரது 26 வயதான மகனும் இவ்வாறு ரிச்மண்ட் ஹில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு இருந்தனர்.
இந்த இருவருக்கு எதிராகவும் ஒன்பது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டொமினிக் லீப்பிளாங்க் மற்றும் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
நாடாளுமன்ற குழு இந்த இருவரிடமும் விசாரணையை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீவிரவாத குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு எவ்வாறு கனடாவில் தங்கி இருக்க அனுமதி வழங்கப்பட்டது என்பது தொடர்பில் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சரியான விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானது என கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ஏனெனில் கனடிய மக்களுக்கு நாட்டின் குடிவரவு முறைமை தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்தேகநபர்களில் ஒருவருக்கு குடியுரிமை வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.