அமெரிக்காவில் விமானத்தில் அட்டகாசம் செய்த பயணி ; இருக்கையுடன் டேப் போட்டு கட்டி வைத்த சக பயணிகள்
அமெரிக்காவில், விமானத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட 67 வயதுடைய பயணி ஒருவர் சக பயணிகளால் இருக்கையுடன் டக்ட் டேப் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கன் ஏர்லைன்ஸின் AA618 விமானம் கடந்த வியாழக்கிழமை டெக்சாஸின் டல்லாஸிலிருந்து நியூவர்க்கை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விமானத்தில் ஏற்பட்ட குழப்பத்தைத் தொடர்ந்து, பயணியின் கைகள் ஜிப் டைகளால் கட்டப்பட்டதுடன், அவர் இருக்கையுடன் டக்ட் டேப் மூலம் கட்டுப்படுத்தப்பட்டதாக மேரிலாந்து போக்குவரத்து ஆணைய காவல்துறை தெரிவித்துள்ளது.
அரிசோனாவைச் சேர்ந்த 67 வயதான ஆர்தர் லண்டீன் என்பவரே இவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துக்கான முழுமையான காரணங்கள் ஆரம்பத்தில் வெளியிடப்படவில்லை என்றாலும், விமானத்தில் அவரது நடத்தை கடுமையாக இருந்ததாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
நிலைமை கட்டுக்கடங்கியதைத் தொடர்ந்து விமானம் அதன் பயணப் பாதையை மாற்றி, இரவு சுமார் 10.15 மணியளவில் Baltimore/Washington International Airport (BWI) விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அங்கு காவல்துறையினர் விமானத்தில் ஏறி அவரை கைது செய்தனர்.
சம்பவம் தொடர்பாக Federal Aviation Administration (FAA) விசாரணை நடத்தி வருவதுடன், FBI-யும் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணியை அகற்றிய பின்னர் விமானம் தனது இறுதி இலக்கான நியூவர்க்கை நோக்கி தொடர்ந்து பயணித்தது.
இந்த சம்பவம் தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், விமானப் பயணங்களின்போது கட்டுப்பாடற்ற பயணிகளால் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்தும் மீண்டும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.