ஒன்டாரியோவில் மருத்துவமனைகள் மீது அதிகளவு புகார்கள்
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் மருத்துவமனைகள் மீது நோயாளிகள் பல்வேறு புகார்களை தெரிவித்துள்ளனர்.
ஒன்டாரியோ மாகாணத்தின் நோயாளர் குறைகேள் அலுவலகம் (Patient Ombudsman Office) இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
இதில் ஒரு நோயாளி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை அறியாமல் மருத்துவமனையால் வெளியேற்றப்பட்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

கடுமையான அதிருப்தி
2024 ஏப்ரல் முதல் 2025 மார்ச் வரையிலான காலகட்டத்தில், மொத்தம் 4,886 புதிய புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன இது முந்தைய ஆண்டை விட 10 சதவீதம் அதிகம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் 4,863 புகார்கள் தீர்க்கப்பட்டதாகவும், சில விசாரணைகள் பல ஆண்டுகளாக நீடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல நோயாளிகள் தங்களது பிரச்சனைகள் கேட்கப்படவில்லை என்று உணர்ந்துள்ளனர்.
சிலர் அவசர சிகிச்சை பிரிவிலிருந்து முறையான பின்தொடர்ச்சி இல்லாமல் வெளியேறியுள்ளனர்.
மேலும் சிலர் மருத்துவ பணியாளர்களின் வன்முறை அல்லது கடுமையான நடத்தை தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ பிரிவுகளில் மனஅழுத்தத்தை கருத்தில் கொள்ளாத சிகிச்சை முறைகள் குறித்து புகார்கள் அளித்துள்ளனர்.