கனடா கல்வி நிறுவனங்களின் நெகிழ்ச்சியான செயல்: உக்ரைன் மாணவர்கள் நெகிழ்ச்சி
உக்ரைன் போரால் கடும் இன்னலுக்கு உள்ளான மாணவர்கள், கனடாவில் உள்ளூர் கட்டணத்திலேயே சலுகைகளுடன் கல்வியை தொடரும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை தொடங்கி 30 நாட்கள் கடந்துள்ளது. பல மில்லியன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், மொத்த பேர்களுக்கும் இந்த ஒருமாத காலத்தில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதுடன், உணவுக்கும் குடிநீருக்கும் அல்லல்பட்டு, சாவின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், உக்ரைனை சேர்ந்த சர்வதேச மாணவர்களுக்கு ஒன்ராறியோவின் பல கல்லூரிகள் சலுகைகள் அளித்து வருவதுடன், அவர்களுக்கு போதிய உதவிகளையும் முன்னெடுத்து வருகிறது.
அந்த வகையில் ரொறன்ரோவின் ஹம்பர் கல்லூரியில் பயின்றுவரும் 183 மாணவர்களுக்கும் சிறப்பு சலுகைகள் அனுமதித்துள்ளதுடன், அவர்கள் உள்ளூர் கட்டணத்திலேயே கல்வியை தொடரவும் வாய்ப்பளித்துள்ளனர்.
பொதுவாக சர்வதேச மாணவர்கள் கல்வி கட்டணமாக ஆண்டுக்கு 20,000 டொலர்கள் செலுத்தி வந்த நிலையில், தற்போது உள்ளூர் மாணவர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள கட்டணத்திலேயே உக்ரைன் மாணவர்களும் கல்வியை தொடர அனுமதித்துள்ளனர்.
இதனிடையே ரொறன்ரோ பல்கலைக்கழகமானது உக்ரைன் மாணவர்களுக்கு உதவும் பொருட்டு 1 மில்லியன் டொலர் நிதியை ஒதுக்கீடு செய்தது.
மட்டுமின்றி, Centennial College மற்றும் George Brown College ஆகியவையும் உக்ரைன் மாணவர்களுக்கான சிறப்பு நிதியுதவிகளை ஏற்பாடு செய்துள்ளது.