டொராண்டோ விமான நிலையத்தில் பல வாகனங்கள் மோதி விபத்து
டொராண்டோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் வியாழக்கிழமை காலை பல வாகனங்கள் மோதியதில் பல பாதசாரிகள் காயமடைந்தனர்.
ஒரு சாரதிக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய மருத்துவ அவசரநிலை (medical episode) காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதிகாலை 7 மணிக்கு சில நிமிடங்களுக்கு முன் டெர்மினல் 3 முன்பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்தில் ஆறு வாகனங்கள் மோதிக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் ஐந்து பாதசாரிகள் மோதி காயமடைந்துள்ளனர். அவர்களுக்கான காயங்கள் லேசானவையே என்று கூறப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் மூவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சம்பவத்தில் தொடர்புடைய எல்லா டிரைவர்களும் இடத்திலேயே இருந்தனர் என்று பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் பல ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வண்டிகள் மற்றும் பொலிஸ் வாகனங்கள் விரைந்து சென்றன.
பியர்சன் விமான நிலையம் வெளியிட்ட அறிவிப்பில், இந்த விபத்து விமான நிலையச் செயல்பாடுகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளது.
மருத்துவ அவசரநிலை குறித்த கூடுதல் தகவல்கள் பொலிஸ் தரப்பில் இதுவரை வெளியிடப்படவில்லை.