ஒட்டாவாவில் வாகனம் மோதி மூதாட்டி பலி:
கனடாவின் ஒட்டாவா நகரின் மேற்குப் பகுதியில் வாகனம் மோதிய விபத்தில் பாதசாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
செவ்வாய்க்கிழமை இரவு 7:30 மணியளவில் வியூமவுண்ட் டிரைவ் மற்றும் சேகினாவ் கிரசென்ட் சந்திப்பில் நடந்து சென்றுகொண்டிருந்த நபர் மீது வாகனம் ஒன்று மோதியது.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தபோதிலும், அந்தப் பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.

நாஃஸ்டேல்-மெரிவேல் பகுதிக்கான கவுன்சிலர் ஷான் டிவைன் தனது முகநூல் பக்கத்தில் இது குறித்துப் பதிவிடுகையில்: உயிரிழந்தவர் தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த ஒரு மூதாட்டி என்று தெரிவித்துள்ளார்.
விபத்து நடந்த இடத்தில் உயிரிழந்தவரின் பேத்தி மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசியதாகக் கூறிய அவர், சாலை விபத்துகள் ஒரு குடும்பத்திற்கு ஏற்படுத்தும் அதிர்ச்சியையும் துயரத்தையும் விவரிக்க முடியாது என வேதனை தெரிவித்தார்.
வியூமவுண்ட் சாலையில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தத் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், ஆனால் இத்தகைய திட்டங்கள் முடிவடைய நீண்ட காலம் எடுத்துக் கொள்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒட்டாவா காவல்துறையின் 'உயிரிழப்பு விபத்துக்கள் விசாரணைப் பிரிவு' வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விபத்தை நேரடியாகப் பார்த்தவர்கள் அல்லது 'டேஷ்கேம்' வீடியோ பதிவுகளை வைத்திருப்பவர்கள் 613-236-1222 என்ற எண்ணில் காவல்துறையைத் தொடர்புகொண்டு தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தையும் சேர்த்து, நடப்பு ஆண்டில் ஒட்டாவா சாலைகளில் விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.