நோர்த் யார்க்கில் வாகனம் மோதியதில் பாதசாரி பலி
நோர்த் யார்க்கில் வாகனம் ஒன்று மோதியதில் ஆபத்தான நிலையில் காயமடைந்த பாதசாரி ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த விபத்து, ப்ரூக்ஹேவன்–ஏம்ஸ்பரி (Brookhaven-Amesbury) பகுதியில், லாரன்ஸ் அவென்யூ வெஸ்டின் தெற்கே அமைந்துள்ள கீல் ஸ்ட்ரீட் மற்றும் கல்லிவர் ரோடு சந்திப்புக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
பாதசாரி ஒருவர் வாகன விபத்தில் சிக்கியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறை அந்த இடத்திற்கு சென்றதாக தெரிவித்தனர்.

ஆரம்பத்தில் 70 வயதுகளைக் கடந்த ஆண் ஒருவராக குறிப்பிடப்பட்ட அந்த பாதசாரி, அவசர சேவையின் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் அவரது காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை என விசாரணையாளர்கள் உறுதி செய்தனர்.
அவசர மருத்துவப் பணியாளர்கள், தீவிரமான மற்றும் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் ஒருவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக தெரிவித்தனர்.
எவ்வாறெனினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் ஈடுபட்ட சிவப்பு நிற பிக்-அப் லாரியின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இருந்து, விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து தொடர்பான விசாரணையை தற்போது காவல்துறையின் விபத்து மறுகட்டமைப்பு பிரிவு மேற்கொண்டு வருகின்றது.