அரசு அறிவித்த குழந்தைகளுக்கான உதவிக்காக காத்திருக்கும் கனேடிய மாகாணம் ஒன்றின் மக்கள்...
ஒன்ராறியோ மாகாணமும், கனேடிய பெடரல் அரசும் குழந்தைகளை பகல் நேரக் காப்பகாங்களில் விடுவதற்கான உதவித்தொகை ஒன்றை அறிவித்தன.
அந்த உதவித்தொகை எப்போது வரும் என காத்திருக்கிறார்கள் ஒன்ராறியோ மாகாண மக்கள்.
ஒன்ராறியோ மாகாணமும், கனேடிய பெடரல் அரசும் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு 13.2 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான குழந்தைகள் நலத்திட்டம் ஒன்றை மேற்கொள்ள முடிவு செய்து குழந்தைகளை பகல் நேரக் காப்பகங்களில் விடும் பெற்றோருக்கு உதவும் வகையில் திட்டம் ஒன்றை அறிவித்தன.
பகல் நேர குழந்தைகள் காப்பகங்களுக்கு மக்கள் நாளொன்றிற்கு 46 டொலர்கள் வரை கட்டணம் செலுத்துகிறார்கள்.
இந்தத் தொகை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு, 2025 வாக்கில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பகல் நேர குழந்தைகள் காப்பகங்களில் விட, நாளொன்றிற்கு 10 டொலர்கள் மட்டுமே செலுத்தும் நிலை உருவாகிவிடும் என மாகாண அரசு அறிவித்திருந்தது.
ஆனால், இன்னமும் அந்த திட்டம் அமுலுக்கு வந்தபாடில்லை!
பிரச்சினை என்னவென்றால், ஒன்ராறியோ மாகாணம் இந்த திட்டத்துக்கான நடவடிக்கைகளைத் துவங்கியதைத் தொடர்ந்து, ரொரன்றோ நகரம் வழங்கிவந்த குழந்தைகளுக்கான உதவி நிறுத்தப்பட்டுவிட்டது.
இதனால் பகல் நேரக் காப்பகங்களில் பிள்ளைகளை விடுவதற்காக பெற்றோர் மாதம் ஒன்றிற்கு 500 டொலர்கள் வரை செலவிடவேண்டியுள்ளது.
image - thestar
இதனால் பாதிக்கப்பட்டவர்களில் இந்தியாவிலிருந்து கனடாவுக்கு வந்துள்ள ஷ்ருதி ஐயரும் ஒருவர். ரொரன்றோவில் வாழும் ஷ்ருதி, தன் மகனை ஒரு சராசரியான பகல் நேரக் காப்பகத்தில் விடுவதற்கே அவருக்கு மாதம் ஒன்றிற்கு 500 டொலர்கள் ஆகிறதாம்.
தான் தனது மகனை அனுமதிக்கும் பகல் நேரக் காப்பகம் மாகாண திட்டத்தில் இணையுமானால், அவரது செலவு குறையும் என காப்பகம் நடத்துவோர் தெரிவித்துள்ளார்கள். நல்லதுதான்... ஆனால், அது எப்போது நடக்கும் என்பதுதான் ஷ்ருதியின் கேள்வி.
மற்ற மாகாணங்களில் வாழும் மக்கள் இந்த சலுகையை அனுபவிக்கத் துவங்கிவிட்ட நிலையில், ஒன்ராறியோ மாகாணத்தில் அது இன்னமும் துவக்கப்படாதது ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளதாக தெரிவிக்கிறார் ஷ்ருதி.
ஷ்ருதி மார்க்கெட்டிங் துறையில் இருக்கிறார். அவரது மூன்று வயது மகனை அவரால் கூட அழைத்துக்கொண்டே அலையமுடியாது. வீட்டிலும் தனியாக விட முடியாது.
அவன் என்ன செய்வான், எப்படி நேரம் செலவிடுவான் என்கிறார் ஷ்ருதி.
ஷ்ருதியைப் போலவே பல பெற்றோர் அரசு வாக்களித்த திட்டம் எப்போது நிறைவேறும் என்பது தெரியாமல் காத்திருக்கிறார்கள்.