ஆப்கானில் நெருக்கடி ; உடமைகளை விற்று சாப்பிடும் அவலநிலையில் மக்கள்!
ஆப்கானிஸ்தானில் நாளுக்கு நாள் நெருக்கடி நிலை தீவிரமடைந்து வரும் நிலையில் அங்க்குள்ள மக்கள் தங்களின் உடமைகளை விற்று சாப்பிடும் நிலை தோன்றியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்காரணமாக காபூலின் பழைய பொருட்கள் விற்கப்படும் சந்தையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறதாகவும் கூறப்படுகின்றது. தங்கள் பொருட்களை விற்பதற்காக வந்திருக்கிறார்கள். அவர்களிடம் பணம் ஏதும் இல்லாத காரணத்தினால், தங்களிடம் இருக்கும் பொருட்களை விற்று சாப்பிடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
விரக்தி நிலையில் உள்ள ஆப்கான் மக்கள் எப்படியாவது தாலிபான் ஆட்சியில் இருந்து தப்பித்து விட வேண்டும் என முயற்சிக்கிறார்கள். அங்கு உணவுக்காக கூட பணம் இல்லாத நிலையில், குறைந்த விலையில் தங்கள் பொருட்களை விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
மெத்தைகள், கண்ணாடிகள், சமையலறை உபகரணங்கள், 1990 களின் தொலைக்காட்சிப் பெட்டிகள், பழைய சிங்கர் தையல் இயந்திரங்கள் போன்ற பல பொருட்கள் விற்பனைக்கு வந்து உள்ளன.
தலிபான்கள் (Taliban Jihadis) நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய பிறகு, ஆப்கானியர்கள் வேலை வாய்ப்புகள் எதுவும் இல்லை. குடிமக்கள் வங்கி கணக்குகளிலிருந்து வாரத்திற்கு $200 எடுக்கலாம் என உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதனால் நாட்டில் நிலவும் , கடும் பண பற்றாக்குறை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் கட்டிட தொழிலாளியான எஹ்சான் வேலை செய்து வந்த கட்டிடத்தின் கட்டுமான திட்டம் ரத்து செய்யப்பட்டது. "காபூலில் இருந்த பணக்காரர்கள், அனைவரும் தப்பித்துவிட்டனர். நாங்கள் தன அல்லல் படுகிறோம்" என்று எஹ்சான் AFP செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
அங்குள்ள மக்கள் சந்தைகளுக்கு வந்து, தங்கள் உடமைகளை அடி மாட்டு விலைக்கு விற்பனை செய்கின்றனர். அவர்கள் தங்கள் உடைமைகளை முதுகில் சுமந்து செல்வதையோ அல்லது தெரு வண்டிகளில் அவற்றை உருட்டிக் கொண்டு செல்வதையோ காணலாம்.
இவ்வாறான நிலையில் ஆப்கானிஸ்தானை தாலிபான் கைப்பற்றியதிலிருந்து, அங்கு வாழ்க்கை நாளுக்கு நாள் நரகமாகிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.