போருக்கு நடுவே 2 பில்லியன் மக்கள்: ஐ.நா மன்றம் அதிர்ச்சி தகவல்
போருக்கு மத்தியில் உலகமெங்கும் 2 பில்லியன் மக்கள் வாழ்ந்து வருவதாக ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த 1945 க்குப் பிறகு உலகம் அதிக எண்ணிக்கையிலான வன்முறை மற்றும் போர்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யேமன், சிரியா, மியான்மர் மற்றும் சூடானில் இருந்து ஹைட்டி, ஆப்பிரிக்காவின் சஹேல் வரையிலான பகுதிகளில் இன மோதல்கள் நடந்து வருவதாகவும், தற்போது உக்ரைனிலும் போர் நடந்து வருவதாகவும் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஓராண்டில் மட்டும் 84 மில்லியன் மக்கள் போரினால் பாதிக்கப்பட்டு தங்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேறி வேறு பகுதிகளுக்கும் நாடுகளுக்கும் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உக்ரைனில் தற்போது ரஷ்ய படையெடுப்பால் 4 மில்லியன் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாகவும், சுமார் 6.5 மில்லியன் மக்கள் உக்ரைனிலேயே வேறு நகரங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும் ஐ.நா பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு உலகெங்கும் சுமார் 274 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் தேவைப்படும் என ஐ.நா மதிப்பீடு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது 2021ம் ஆண்டை ஒப்பிடுகையில் 17% அதிகரித்துள்ளதாகவும் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கடந்த பத்தாண்டுகளில், அமைதி காத்தல், மனிதாபிமான நிவாரணம் மற்றும் அகதிகள் ஆதரவுக்காக உலக நாடுகள் 349 பில்லியன் டொலர்கள் செலவிட்டுள்ளது.
ஆனால், 2020ல் உலகளாவிய இராணுவச் செலவுகள் கிட்டத்தட்ட 2 டிரில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளன.