பிரான்ஸில் சம்பள உயர்வு, வாழ்க்கைச் செலவைக் குறைக்கக் கோரி வீதிகளில் இறங்கிய மக்கள்
பிரான்ஸில் தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களை முன்னெடுக்க ஆயத்தமாகி வருவதால், அங்கு பிரம்மாண்ட மக்கள் போராட்டம் ஆரம்பித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஐந்து பிரதான தொழிற்சங்கங்கள் இந்த நாடு தழுவிய போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.

கல்வித் துறையில் உள்ள குறைபாடுகளுக்கு எதிராகப் பாடசாலை மாணவர்கள் தொடங்கிய இந்தப் போராட்டத்தில், "மஞ்சள் அங்கி" (Yellow Vest) இயக்கத்தினரும், அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களும் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்போராட்டங்களில் 5 இலட்சம் முதல் 7 இலட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதுடன், பாதுகாப்பிற்காகச் 70,000 காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்தப் போராட்டங்கள் காரணமாகப் போக்குவரத்து, கல்வி மற்றும் எரிசக்தித் துறைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டப் பேரணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.