30,000 அடி உயரத்தில் பறந்தபோது விமானிக்கு மாரடைப்பு ; அச்சத்தில் உறைந்த பயணிகள்!
ஸ்பெயினின் டெனெரிஃப் (Tenerife) தீவிலிருந்து பிரிட்டனின் பர்மிங்காம் நகரை நோக்கி 220 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த ஜெட்2 (Jet2) நிறுவனத்திற்குச் சொந்தமான ஏர்பஸ் A321 விமானத்தில், 30,000 அடி உயரத்தில் பறந்தபோது எதிர்பாராத விதமாக விமானிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் பயணிகள் அச்சத்தில் உறைந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை அதிகாலை நேரத்தில் இந்த மருத்துவ அவசரநிலை ஏற்பட்டதால், காக்பிட்டில் இருந்த முதன்மை விமானி மயக்கமடைந்தார். இதனால் விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பெரும் பதற்றம் தொற்றிக்கொண்டது.

அதிர்ச்சியடைந்த விமானப் பணிப்பெண்கள்
விமானிக்கு மாரடைப்பு ஏற்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விமானப் பணிப்பெண்கள் பயணிகள் அமர்ந்திருந்த பகுதிக்கு ஓடிவந்து யாரேனும் மருத்துவர்கள் இருக்கிறீர்களா என உதவி கேட்டு கதறியுள்ளனர். இதனால் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் அலறியடித்து விழித்தனர்.
அதே நேரத்தில், விமானத்தின் துணை விமானி (First Officer) உடனடியாக கட்டுப்பாட்டைத் தன் கையில் எடுத்து, போர்ச்சுகல் நாட்டின் போர்ட்டோ (Porto) நகரை நோக்கி விமானத்தைத் திருப்பியதோடு, அவசரமாகக் கீழே இறக்கத் தொடங்கினார்.
விமானம் மிக வேகமாக கீழ்நோக்கி இறங்கியதாலும், எச்சரிக்கை விளக்குகள் மின்னியதாலும் பயணிகள் மரண பயத்தில் அழத் தொடங்கினர். எனினும், துணை விமானியின் சாதுரியமான செயலால் விமானம் அதிகாலை 2:11 மணிக்கு போர்ட்டோ விமான நிலையத்தில் பாதுகாப்பாக அவசரத் தரையிறக்கம் செய்யப்பட்டது.
ஓடுதளத்தில் தயாராகக் காத்திருந்த மருத்துவக் குழுவினர் உடனடியாக விமானத்திற்குள் நுழைந்து, மாரடைப்பால் பாதிக்கப்பட்ட விமானிக்கு முதலுதவி வழங்கி அவரைப் பத்திரமாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இந்த இக்கட்டான சம்பவத்திற்குப் பின், பயணிகள் அனைவரும் மாற்று விமானம் வரும் வரை சுமார் 13 மணி நேரத்திற்கும் மேலாகப் போர்ட்டோ விமான நிலையத்திலேயே தவித்தனர்.
மான்செஸ்டர் நகரிலிருந்து ஜெட்2 நிறுவனம் புதிய விமானியை அனுப்பி வைத்த பிறகே பயணிகள் பர்மிங்காம் நகருக்குத் தங்களது பயணத்தைத் தொடர்ந்தனர்.
அதேவேளை பயணிகளுக்கு ஏற்பட்ட தாமதத்திற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்ட ஜெட்2 நிர்வாகம், பயணிகளின் பாதுகாப்பு எவ்விடத்திலும் சமரசம் செய்யப்படவில்லை என்றும், துணை விமானி நிலைமையைச் சிறப்பாகக் கையாண்டதாகவும் பாராட்டுத் தெரிவித்துள்ளது.