நியூயார்க்கில் பீட்சா டெலிவரி செய்த 28 வயது இளைஞர் சுட்டுக்கொலை
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பீட்சா டெலிவரி பணியில் ஈடுபட்டிருந்த பஞ்சாபைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம், பிகோவால் கிராமத்தைச் சேர்ந்த குர்தீப் சிங் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தன்று பீட்சா டெலிவரி செய்வதற்காக சென்றிருந்த குர்தீப் சிங்கை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதல் கொள்ளை முயற்சியின் போது இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் விசாரணைகளின் பின்னரே தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக நியூயார்க் நகர பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குர்தீப் சிங்கின் மரணம் அவரது குடும்பத்தினரையும் பிகோவால் கிராம மக்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அவருக்கு தந்தையும் சகோதரர் ஒருவரும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குர்தீப் சிங்கின் உடலை விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்க மற்றும் இந்திய அரசாங்கங்கள் தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், சம்பவத்துக்கு காரணமான நபரை விரைவாக கைது செய்து, அவருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
குர்தீப் சிங் சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்னர் கடன் பெற்றுக்கொண்டு அமெரிக்கா சென்றதாகவும், அங்கு பணியாற்றி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.