நடுவானில் பதற்றம் ; டிரம்ப்பின் விமானத்தை நெருங்கி வந்த பயணிகள் விமானம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது மனைவி மெலனியா ட்ரம்புடன் பிரிட்டனுக்கான அரசுமுறை பயணமாக புறப்பட்டபோது, அவர்களின் ஏர்போர்ஸ் ஒன் விமானம் வானில் பறந்துகொண்டிருந்தபோது பாரிய பதற்றமொன்று ஏற்பட்டுள்ளது.
லாங் தீவுக்கு மேல் பறந்துக் கொண்டிருந்த ட்ரம்பின் விமானத்திற்கு இணையாக ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் “ஸ்பிரிட் 1300” விமானமும் நெருக்கமாக பறந்ததால் இந்த நிலை ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
போர்ட் லாடர்டெல் நகரில் இருந்து பாஸ்டனுக்குப் புறப்பட்டிருந்த இந்த பயணிகள் விமானம் எதிர்பாராத வகையில் ட்ரம்பின் விமானத்துக்கு அருகில் வந்ததால் கட்டுப்பாட்டு அறையில் பதற்றம் நிலவியுள்ளது.
அதன்போது, நியூயார்க் டவர் விமான கட்டுப்பாட்டு மையம் உடனடியாக அந்த விமானத்துடன் தொடர்புகொண்டு “20 டிகிரி வலதுபுறம் திரும்புங்கள்” என உத்தரவு பிறப்பித்தும் விமானிகள் உடனடியாக பதிலளிக்காததால் பதற்றம் மேலும் அதிகரித்ததாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இரண்டு விமானங்களுக்கும் இடையே சுமார் 8 முதல் 11 மைல் தூரம் இருந்ததால் எந்தவித விபத்தும் நடைபெறவில்லை, இரு விமானங்களும் பின்னர் பாதுகாப்பாக தரையிறங்கின.
ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாக விதிமுறைகளின்படி நியூயார்க் வான்வெளியில் குறைந்தது 1.5 மைல் தூரமும், 500 அடி உயர வேறுபாடும் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் கட்டுப்பாட்டு அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், பயணிகள் பாதுகாப்பே எங்களின் முதலாவதான முன்னுரிமை எனவும், விமானம் வழக்கமான நடைமுறைகளையும் கட்டுப்பாட்டு உத்தரவுகளையும் பின்பற்றி தனது பயணத்தை நிறைவு செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.