விமான இறக்கைகள் மோதி விபத்து ; இந்தியாவில் சம்பவம்
இந்தியாவின் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில், நேற்று (03) இரவு இரண்டு பயணிகள் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
புறப்படுவதற்குத் தயாராக இருந்த எயார் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான எயார்பஸ் A320 விமானமும், ஹைதராபாத்திலிருந்து வருகை தந்த இன்டிகோ நிறுவனத்திற்குச் சொந்தமான எயார்பஸ் A320 விமானமுமே இவ்வாறு மோதிக்கொண்டன.

தவிர்க்கப்பட்ட விபத்து
இரண்டு விமானங்களும் மிகக் குறைந்த வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்ததால், பாரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. எனினும், மோதிக் கொண்டதில் இரண்டு விமானங்களினதும் இறக்கைகளின் நுனிப்பகுதிகள் சேதமடைந்துள்ளன.
விமானங்களில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன், அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
விபத்தைத் தொடர்ந்து குறித்த விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளை விமான நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.
இந்தச் சம்பவம் குறித்து இந்திய சிவில் விமானப் போக்குவரத்து பணிப்பாளர் நாயகம் அலுவலகம் (DGCA) முறையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையின் அறிவுறுத்தல்கள் மற்றும் விமானத்தைக் கையாண்ட விதம் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.