கனடாவில் இடம்பெறும் மோசடி குறித்து எச்சரிக்கை
கனடாவின் ஹால்டன் பகுதியில் இடம்பெற்று வரும் மோசடி சம்பவங்கள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வீடுகளை புனரமைப்பதாக கூறி நூதன முறையில் மோசடிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீடுகளின் சில பகுிகளில் புனரமைத்துக் கொடுப்பதாக கட்டிட ஒப்பந்தக்காரர்கள் என்ற போர்வையில் வீடுகளுக்கு சென்று மோசடியில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தை விலைகளை விடவும் குறைந்தளவு தொகைக்கு புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதாக உறுதியளித்த போதிலும், பணம் பெற்றுக்கொண்டதன் பின்னர் பணிகள் பூர்த்தியாவதில்லை என தெரிவிக்கின்றனர்.
பணம் பெற்றுக்கொண்டதன் பின்னர் உரிய சேவையை வழங்காத ஒப்பந்தக்காரர்கள் வாடிக்கையாளர்களின் தொலைபேசி அழைப்புக்களுக்கு பதிலளிப்பதில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஹால்டன் பிராந்தியத்தில் மட்டுமன்றி றொரன்டோ பெரும்பாக பகுதிகளிலும் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறான கட்டிட ஒப்பந்தக்காரர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால் அது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.