தப்பியோடிய ரஷ்ய வீரர்களுக்கு பிரான்சில் அரசியல் தஞ்சம்!
உக்ரேனில் நடந்த போரில் இருந்து தம் உயிரைக்காக்க தப்பி ஓடிய ரஷ்ய இராணுவ வீரர்கள் 6 பேருக்கு பிரான்சில் அரசியல் தஞ்சம் கோரி தற்காலிக விசா வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மனித உரிமை ஆர்வலர்கள், இராணுவத்திலிருந்து தப்பியோடிய குழு ஒன்றிற்கு ஐரோப்பிய ஒன்றிய நாட்டில் அனுமதிக்கப்பட்ட முதல் பெரிய வழக்கு என்று விவரிக்கின்றனர்.
ஆரம்பத்தில் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் ரஷ்யாவிலிருந்து கஜகஸ்தானுக்கு தப்பிச் சென்ற பின்னர் ரஷ்ய வீரர்கள், அண்மைய மாதங்களில் தனித்தனி விமானங்களில் பாரிஸுக்கு வந்துள்ளனர் என்று அவர்களை தப்பிக்க உதவிய அமைப்பு தெரிவித்துள்ளது.
அதேவேளை உக்ரேனில் போர் தொடங்கிய 2022 பெப்ரவரியில் இருந்து இராணுவத்தில் இருந்து வெளியேறிய அல்லது சண்டையிட உத்தரவுகளை மறுத்த ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கானதாக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.