மக்கள் தொகை வரம்பு திட்டம் ; சுவிட்சர்லாந்தில் கடும் அரசியல் விவாதம்
சுவிட்சர்லாந்தில் 2050 ஆம் ஆண்டிற்குள் மக்கள் தொகையை அதிகபட்சமாக 10 மில்லியனாக (1 கோடி) கட்டுப்படுத்தும் புதிய திட்டம் தொடர்பான முக்கிய பொது வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.
தற்போது சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகை சுமார் 9.1 மில்லியனாக உள்ள நிலையில், கட்டுப்பாடற்ற குடியேற்றம் காரணமாக வீடமைப்பு, போக்குவரத்து மற்றும் பொதுச் சேவைகளில் கடுமையான அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சி (Swiss People’s Party) இந்த திட்டத்தை முன்வைத்துள்ளது.

எனினும், இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் மருத்துவமனை மற்றும் ஹோட்டல் துறைகளில் கடுமையான பணியாளர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், மேலும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான (EU) முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் பாதிக்கப்படக்கூடும் எனவும் சுவிட்சர்லாந்து அரசு மற்றும் தொழில்துறை தரப்புகள் எச்சரித்துள்ளன.
அத்துடன், இந்தக் கொள்கை நடைமுறைக்கு வந்தால் சுவிட்சர்லாந்து உலகளவில் பொருளாதார ரீதியாக தனிமைப்படும் அபாயம் இருப்பதாகவும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
தற்போதைய கருத்துக்கணிப்புகளின்படி, இந்தத் திட்டத்திற்கு எதிராக 52 வீதமும் ஆதரவாக 45 வீதமும் கருத்துகள் பதிவாகியுள்ளன.
இதனால் வாக்கெடுப்பு முடிவு மிக நெருக்கமான வாக்கு வித்தியாசத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.