நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கையால் பதற்றமடைந்த மக்கள்
பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், நாட்டின் பல பகுதிகளில் உணரப்பட்டதாக சர்வதேச நில அதிர்வு கண்காணிப்பு மையங்கள் தெரிவித்துள்ளன.
நிலநடுக்கத்தின் தாக்கத்தால் கட்டிடங்கள் பலத்த அதிர்வுக்கு உள்ளாகியதுடன், மக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர்.

இதனையடுத்து, கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதால், அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
எனினும், உயிரிழப்புகள் அல்லது பாரிய சேதங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. நிலைமையை நியூசிலாந்து அவசரகால சேவைகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.