விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் செயற்பாடுகளை கனடா அனுமதிக்க கூடாது
தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கு கனடா அனுமதிக்கக் கூடாது என இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துளள்து.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கொழும்பிற்கான கனடா உயர்ஸ்தானிகர் இஸபெல்லா செதரீன் மார்டீனுடன் இது தெடர்பில் விவாதங்களை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பில், இலங்கையில் பிரிவினைவாத சிந்தனைகளை ஊக்குவிக்கும் எந்தச் செயல்பாடுகளையும் அனுமதிக்க வேண்டாம் என அமைச்சர் ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் குறியீடுகளை அங்கீகரிப்பதும், இனக்குழுக்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சிகளும் தடுக்க வேண்டிய அவசியத்தை கனடா அரசுக்கு தெரிவிக்கும்படி அமைச்சர் ஹேரத் கேட்டுக்கொண்டுள்ளார்.
சில அமைப்புகள் கனடாவில் மேற்கொண்டு வரும் செயல்பாடுகள், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்த இலங்கை அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முரணானவை எனவும் அவர் கவலை தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த கனடா உயர்ஸ்தானிகர் மார்ட்டின், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இன்னும் கனடாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகவே இருந்து வருவதாகவும், அந்த அமைப்புடன் தொடர்புடைய எந்தச் சின்னங்களையோ பிரிவினைவாத சிந்தனைகளையோ கனடா மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இறையாண்மை மற்றும் நிலைப்பாட்டை ஆதரிக்கும் கனடாவின் நிலைப்பாடு தொடர்ந்தும் உறுதியானது என அவர் வலியுறுத்தியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது