ஆஸ்திரேலியாவில் அவசர நிலையை அறிவித்த பிரதமர்
ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பையடுத்து தேசிய அவசர நிலையை அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன்(Scott Morrison) அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக பலத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஆஸ்திரேலியாவின் நியூசெளத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லேண்ட் உள்ளிட்ட மாகாணங்களில் வெள்ள பாதிப்பு தீவிரமாக ஏற்பட்டுள்ளது.
குயின்ஸ்லேண்ட் மாகாணத்தின் தலைநகர் பிரிஸ்பேனில் பிப்ரவரி 28ஆம் தேதிக்கு முந்தைய 3 நாள்களில் ஆண்டு சராசரி மழைப்பொழிவில் 80 சதவிகிதத்தை சந்தித்துள்ளதால் மாநகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தங்களது குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நியூசெளத் வேல்ஸ் மாகாணத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன்(Scott Morrison) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து வெள்ள பாதிப்பை தேசிய அவசர நிலையாக அறிவித்துள்ளார்.