கனடாவின் 24ஆவது பிரதமர் வெள்ளிக்கிழமை பதவியேற்பு!
லிபரல் கட்சியின் மார்க் கார்னி எதிர்வரும் வெள்ளிக்கிழமை தனது அமைச்சரவையுடன் இணைந்து கனடாவின் 24ஆவது பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
லிபரல் கட்சித் தலைமை தேர்தலில் முதல் சுற்றிலேயே வெற்றி பெற்ற கார்னி, தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் இருந்து அதிகாரத்தை பெற்றுக்கொள்ள உள்ளார்.
பிரதமர் மற்றும் கனடிய அமைச்சரவையின் பதவியேற்பு விழா ஒட்டாவாவில் உள்ள ரிடோ ஹால் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறும் என அளுனர் நாயகம் மேரி சைமன் அலுவலகம், உறுதி செய்துள்ளது.
லிபரல் கட்சித் தலைவராக தனது முதல் நாளான திங்கட்கிழமை, கார்னி பிரதமர் அலுவலகத்திற்கு சென்று, அதிகார மாற்றம் தொடர்பில் ட்ரூடோவுடன் கலந்துரையாடினார்.
ஒட்டாவா மற்றும் அதன் வெளியே உள்ள முக்கிய அதிகாரிகளுடன் சந்திப்புகளை மேற்கொண்டு, அதிகார மாற்றத்தை வெற்றிகரமாகச் செய்ய அரசு தரப்பு நடவடிக்ககைள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முன்னதாக கனடா மற்றும் இங்கிலாந்து மத்திய வங்கியின் ஆளுநராக பணியாற்றியுள்ள கார்னி, தனது சொத்துகளை முழுமையாக ஒரு கண்காணிக்கப்படாத அறக்கட்டளைக்கு மாற்றியுள்ளார் என அவரது பேச்சாளர் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை ட்ரூடோ கவர்னர் ஜெனரலை சந்தித்து தனது பதவி ராஜினாமா செய்துவிடுவார்.
அதன் பிறகு, கார்னி பிரதமராக பதவியேற்பு சத்தியம் செய்து, உறுதிமொழி ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பிரதமர் தனது அமைச்சரவையைத் தேர்வு செய்து அறிவிப்பார்.
லிபரல் கட்சித் தலைமை போட்டியின் போது கார்னிக்கு ஆதரவு தெரிவித்த அமைச்சர்களில் முக்கியமானோர் முக்கியமான அமைச்சுப் பொறுப்புகளை தொடருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.