நெதர்லாந்து வீதியில் ஏற்பட்ட திடீர் விபத்து ; மக்கள் பதற்றம்
நெதர்லாந்தில் பொது மக்கள் மீது கார் ஒன்று மோதியதில் 09 பேர் காயமடைந்துள்ளனர்.
நெதர்லாந்து நாட்டின் ஹெல்டர்லாந்து மாகாணம் நன்ஸ்பெட் பகுதியில் உள்ள வீதியில் திங்கட்கிழமை இரவு கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அணிவகுப்பு நடைபெறவிருந்தது.
இந்த அணிவகுப்பை காண ஏராளமான மக்கள் கூடியிருந்தனர்.

அப்போது, வீதியில் வேகமாக வந்த கார் அங்கு கூடியிருந்த மக்கள் மீது மோதியது. இந்த சம்பவத்தில் 9 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற பொலிஸார், காயமடைந்த 9 பேரையும் மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
அதேவேளை, காரை ஓட்டிய நன்ஸ்பெட் பகுதியை சேர்ந்த 56 வயது மூதாட்டியிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் விபத்தா?, பயங்கரவாத தாக்குதலா? என்பது குறித்து பொலிஸார் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.