சச்சினுடன் வீதியில் கிரிக்கெட் விளையாடிய இளவரசர் வில்லியம் - கேட் தம்பதியினர்
வருடாந்த 'எர்த்சொட்' சூழலியல் விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி இளவரசி கேட் மிடில்டன் ஆகியோர் இன்று திங்கட்கிழமை (16) இந்தியாவின் மும்பை நகரை சென்றடைந்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டு புற்றுநோய்க்கான சிகிச்சையைப் பெற்றதன் பின் இளவரசி கேட் மேற்கொள்ளும் மிக முக்கியமான மற்றும் பாரிய வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

தெருவோர கிரிக்கெட் போட்டி
அரச தம்பதியினரின் மூன்று நாள் இந்தியப் பயணத்தில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து தெருவோர கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார்கள்.
இந்தியாவின் நிதித் தலைநகரான மும்பையின் மெட்ரோ ரயிலில் பயணம் மற்றும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள விருது வழங்கும் விழாவில் பங்கேற்கும் பிரபல பொலிவூட் நட்சத்திரங்களுடனான சந்திப்புகள் ஆகியவை இடம்பெறவுள்ளன.
மும்பை நிகழ்வுகளைத் தொடர்ந்து, புதுடெல்லி செல்லவுள்ள இளவரசர் வில்லியம் மற்றும் கேட் ஆகியோர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதுடன் தமது இந்தியப் பயணத்தை நிறைவு செய்யவுள்ளனர்.
காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளைக் கண்டறியும் நோக்கில் 2020 ஆம் ஆண்டு இளவரசர் வில்லியமால் நிறுவப்பட்ட இந்த விருது, தெரிவு செய்யப்படும் 05 வெற்றியாளர்களுக்குத் தலா 1 மில்லியன் பவுண்டுகளை வழங்கி அவர்களின் சூழலியல் திட்டங்களை விரிவுபடுத்த உதவுகிறது.
44 வயதான இளவரசி கேட், 2024 ஆம் ஆண்டு புற்றுநோய்க்கான தடுப்பு கீமோதெரபி சிகிச்சையைப் பெற்ற பின் தமது உத்தியோகபூர்வப் பணிகளைக் கணிசமாகக் குறைத்திருந்தார்.
தற்போது அவர் நோயிலிருந்து குணமடைந்து படிப்படியாகப் பொது நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகின்ற போதிலும், வில்லியமுடனான முந்தைய வெளிநாட்டுப் பயணங்களில் அவர் இணைந்திருக்கவில்லை.
கடந்த மே மாதம் குழந்தைப்பருவ வளர்ச்சித் திட்டத்திற்காகத் தனியாக இத்தாலிக்கு 2 நாள் பயணம் மேற்கொண்டதே அவரது முந்தைய வெளிநாட்டுப் பயணமாகும்.