ஈரான் தாக்குதலில் 6 அமெரிக்க வீரர்கள் பலி ; உயிர் தப்பிய மேஜர் அதிர்ச்சிப் புகார்
ஈரான் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஆறு அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், தங்களுக்குப் போதிய பாதுகாப்பு மற்றும் மருத்துவ அவசர சேவைகள் வழங்கப்படவில்லை என உயிர் தப்பிய அமெரிக்க இராணுவ மேஜர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்க இராணுவத்தின் 103ஆவது கட்டளைப் பிரிவின் துணைத் தலைவராகப் பணியாற்றிய மேஜர் ஸ்டீபன் என்பவரே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அவர் அமெரிக்க பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையின் ஆயுத சேவைகள் குழுக்களிடம் இது தொடர்பான முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார்.

ஈரானின் ஹார்முஸ் நீரிணையைத் திறக்க வலியுறுத்தி அமெரிக்கா கடந்த மார்ச் முதலாம் திகதி ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ (Operation Epic Fury) என்ற இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்தது.
இதன் ஒரு பகுதியாக குவைத்தில் உள்ள ஷூவைபா துறைமுகப் பகுதியில் அமெரிக்க இராணுவ வளாகம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த தாக்குதலில் ஆறு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ள மேஜர் ஸ்டீபன், குறித்த இராணுவ வளாகம் தரைவழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கேற்ப அமைக்கப்பட்டிருந்ததாகவும், வான்வழித் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான போதிய உள்கட்டமைப்பு அங்கு இருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஷூவைபா துறைமுகத்தில் ஆளில்லா விமானங்களை இடைமறித்து அழிக்கும் பாதுகாப்பு அமைப்பைத் தமது இராணுவ வீரர்கள் கோரியிருந்த போதிலும், பென்டகன் அதனை வழங்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அத்துடன், குறித்த இராணுவ வளாகத்தில் நிரந்தர மருத்துவ வசதிகளோ, முதலுதவி நிலையமோ இருக்கவில்லை என்றும், ஒரேயொரு அவசர ஊர்தி சேவை மட்டுமே காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க இராணுவ மேஜர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை அமெரிக்க போர் செயலர் பீட் ஹெக்செத் மறுத்துள்ளார்.
எனினும், துரதிர்ஷ்டவசமாக ஈரானின் ஆளில்லா விமானம் ஒன்று இராணுவ வளாகத்திற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதாகவும், இதன்போது ஆறு அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆறு வீரர்களின் உயிரிழப்புக்குப் பின்னணியில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்ட குறைபாடுகள் இருந்தனவா என்ற கேள்வியை மேஜர் ஸ்டீபனின் முறைப்பாடு எழுப்பியுள்ள நிலையில், இந்த விவகாரம் அமெரிக்க இராணுவ வட்டாரங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது.