சிறைகளில் வெடித்த கலவரம் ; 46 பொலிஸாரை சிறைப்பிடித்த கைதிகள்
மத்திய அமெரிக்க நாடான குவாதமாலாவில் உள்ள மூன்று முக்கியமான சிறைகளில் கைதிகள் திடீரென கலவரத்தில் ஈடுபட்டு, அங்கிருந்த 46 சிறைக்காவலா்களைப் பிணையாகப் பிடித்து வைத்துள்ளதால் நாடு முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சிறையில் இருக்கும் சமூகவிரோத கும்பல் தலைவா்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த சில சிறப்புச் சலுகைகளை சிறை நிா்வாகம் அண்மையில் ரத்து செய்தது.

பாதுகாப்புப் படையினா்
இதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையிலும், தங்களை வேறு சிறைகளுக்கு மாற்ற வலியுறுத்தியும் கைதிகள் திட்டமிட்டு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனா்.
தற்போது கைதிகளின் பிடியில் உள்ள சிறைச் சாலைகளைச் சுற்றி தேசியப் பாதுகாப்புப் படையினா் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனா். இதுவரை உயிரிழப்புகளோ அல்லது யாருக்கும் காயங்களோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
இது தொடா்பாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சா் மாா்கோ ஆண்டோனியோ வில்லெடா பேசுகையில், ‘கைதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்த அரசு தயாராக இருக்கிறது.
இருப்பினும், அவா்கள் விதிக்கும் சட்டவிரோத நிபந்தனைகளுக்கு அரசு ஒருபோதும் பணியாது’ என்று உறுதிப்பட தெரிவித்தாா். முன்னதாக கடந்த அக்டோபரில், சிறையில் இருந்து 20 கைதிகள் தப்பியோடிய விவகாரத்தில் அப்போதைய உள்துறை அமைச்சா் உள்பட மூவா் பதவி விலகினா்.
அப்போது, கௌதமாலா அதிபா் பொ்னாா்டோ அரேவலோ கூறுகையில், ‘சிறைக்குள் இருப்பவா்களுக்கும் வெளியில் நடக்கும் குற்றச் செயல்களுக்கும் இடையிலான தொடா்பைத் துண்டிக்க வேண்டும். சிறைச்சாலையை முழுமையாக அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே எங்களின் முக்கியமான நோக்கம்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.