உக்ரைனில் ஜனாதிபதியை இலக்கு வைத்து களமிறங்கிய தனியார் இராணுவம்! பரபரப்பாகும் கள முனை
உக்ரைன் நாட்டில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அந்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப். 24ஆம் தேதி முழு வீச்சிலான போரை ஆரம்பிக்க ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்ய ராணுவத்தினர் முழு வீச்சிலான போரை ஆரம்பித்துள்ளனர்.
ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து உக்ரைன் மிகவும் துணிச்சலாகப் போராடி வருகிறது. இதனால் பல பகுதிகளில் ரஷ்ய ராணுவம் முன்னேற முடியாமல் ஸ்தம்பித்துள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போர் 4ஆவது வாரமாகத் தொடரும் நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய அதிருப்தி குழு போராளிகளை உக்ரைன் நாட்டில் ரஷ்யா அனுப்பி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் புலனாய்வு இயக்குநரகம் தனது பேஸ்புக் பதிவில், "புதினுக்கு நெருக்கமான ரஷ்ய ஆதரவாளரான யெவ்ஜெனி பிரிகோஜினுடன் தொடர்புடைய அதிருப்தி வாக்னர் குழுவினர் இன்று உக்ரைனுக்கு வரத் தொடங்கினர்.
உக்ரைன் நாட்டின் உயர்மட்ட ராணுவ மற்றும் அரசியல் தலைமையை அகற்றுவதே இவர்களின் முக்கிய இலக்கு" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் முதன்மை புலனாய்வு இயக்குநரகம், "ரஷ்ய ஆதரவு படைகளின் ஹிட் லிஸ்ட்டில் உள்ள முக்கிய இலக்குகளில் ஜெலன்ஸ்கியை தவிர, உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால், உக்ரைன் தலைமை வழக்கறிஞருமான ஆண்ட்ரி எர்மாக் ஆகியோரும் அடங்குவர்.
இவர்களைத் தவிர வேறு சில நபர்களையும் கொல்ல புதின் நேரடியாக உத்தரவிட்டுள்ளார். இருப்பினும், அவர்களின் முயற்சிகள் வெற்றி பெறாது. பயங்கரவாதிகள் கொல்லப்படுவார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
பல வாரங்களாகவே தனியார் ராணுவ அமைப்பாக அறியப்படும் லிகாவிலிருந்து ஆயிரக்கணக்கான ரஷ்ய கூலிப்படையாயினர் உக்ரைனுக்குள் நுழைந்து அதிபர் ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய முயன்று எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்பதால் இதுபோல உள்நாட்டு குழப்பங்களை ஏற்படுத்த ரஷ்யா தொடர்ந்து முயன்று வருவதாக உளவு அமைப்புகள் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இதற்காக ஆப்பிரிக்காவில் இருந்து தனியார் ராணுவ வீரர்களை ரஷ்யா தொடர்ந்து களமிறக்கி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளன.
ரஷ்ய அதிபர் உடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டவர் தொழிலதிபர் ப்ரிகோஜின். உக்ரைன் போர் காரணமாக உலக நாடுகள் பொருளாதார தடைகளை அறிவித்த போது, இவர் மீது தான் அதிகமான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டு இருந்தது.
இப்போது உக்ரைன் நாட்டிற்குள் அனுப்பப்படும் ரஷ்ய உளவாளிகள் மற்றும் ராணுவத்தின் பின் இந்த ப்ரிகோஜினே இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், இதை அவர் தொடர்ந்து மறுத்தே வருகிறார். அதேபோல உக்ரைன் நாட்டின் முக்கிய அரசியல்வாதிகளையும் கொல்ல இந்த தனியார் ராணுவம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் நாட்டில் போர் தொடங்கிய பின்னர் அங்கு கடும் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது. போர் தொடங்கிய பின்னர் சுமார் ஒரு கோடிக்கும் மேலான உக்ரைன் மக்கள் அவர்கள் தங்குமிடத்தை விட்டு வெளியேறியுள்ளதாக இருக்கலாம் ஐநா சபை தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வெளிநாடுகளுக்கு, குறிப்பாக போலந்து நாட்டிற்குச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.